Sunday, September 7, 2014

கோவிலின் வகைகள் - பாகம் 1



பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோவில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
  கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
  இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்  
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
  தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே


என்ற அப்பர் பெருமானின் பாடல் வழியாக சங்க்காலத்து இறுதியில் வாழ்ந்த மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்காக எழுப்பிய எழுபது கோவில்கள் பற்றியும், திருவாசக காலத்தில் இருந்த ஏழு வகை கோவில்கள் பற்றியும் அறிய முடிகிறது.
·         ஆலக்கோயில்,
·         இளங்கோயில்,
·         கரக்கோயில்,
·         ஞாழற்கோயில்,
·         கொகுடிக் கோயில்,
·         மணிக்கோயில்,
·         பெருங்கோயில்
என்பனவே அவ்வேழு வகை கோயில்களாகும். இவ்வேழு வகை கோவில்கள் இருந்த்து உண்மையெனிலும், அவை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதில் பல வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவ்வகை கோயில்கள் சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிரிஷ்டம், கேசரம் எனும் ஏழு வகைக் கோவில்களின் தமிழ்ப் பெயர்கள் என்றும் கூறப்படுகின்றது. எனினும் அவ்வேழு கோவில்களின் பொதுவான தோற்றங்களைக் காண்பதும் அவசியமாகும்.

ஆலக்கோவில்:
ஆலக்கோவில் என்பது ஆனைக் கோயில் என்பதன் மரூஉ என்று அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இக்கோவிலின் வடிவமைப்பை பற்றி மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சில அறிஞர்கள் ஹஸ்திபிரிஷ்டம் கோவில் வகையே ஆலக் கோவில் என்பர், அதாவது தூங்கும் நிலையில் இருக்கும் யானையின் பின் புறத்தைப் போன்ற தோற்றமுடைய விமானம் கொண்டது இவ்வகை கோவிலாகும். அதற்கு உதாரணமாக திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு ஆகிய கோவில்கள் கூறப்படுகின்றது. சிலர் ஆலம் என்பது நீர் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல், ஆதலால் நீர் சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில்களே ஆலக்கோயில்கள் என்று கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சை வலிவலம்,திருப்புகழூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களைக் கூறுவர். சில அறிஞர்கள் ஆல மரத்தைச் சார்ந்த கோவில்களே ஆலக்கோவில்கள் எனக் கூறுவர். இதற்கு உதாரணமாக திருக்கச்சூர் கோவிலையும் குறிப்பிடுவர்.

இளங்கோவில்:
பழைய கோவிலை சீரமைக்கும் பொழுது அருகில் ஒரு சிறு கோவில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்து, பிறகு கோவிலின் சீரமைப்பு பணியினைத் தொடங்குவர். இவ்வாறு கட்டப்படும் சிறு கோவில்களுக்கு இளங்கோவில் என்பது பெயராகும். பெரும்பாலும் இக்கோவில்கள் நான்கு பட்டையுடைய விமானங்களைக் கொண்டிருக்கும். இவ்வகையில் இளங்கோவில் கட்டும் மரபு இன்றும் வழக்கத்தில் உண்டு. இதனை பாலாலயம் செய்தல் எனக் கூறுவர். இது போன்ற இளங்கோயில்கள் திருமீயச்சூர், மற்றும் கீழைக் கடம்பூரிலும் உண்டு எனக் கூறப்படுகின்றது.

கரக்கோயில்:
கரக்கோவிலின் வடிவமைப்பில் இரண்டு வகையான விளக்கங்கள் கூறப்படுகின்றன. வட்டவடிவமான விமானம் கொண்டது கரக்கோவில் என்றும் இரு சக்கரத்துடன் தேர் போன்ற வடிவமைப்பைக் கொண்டது கரக்கோவில் எனவும் கூறப்படுகின்றது.
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் என அப்பர் பெருமான் பாடியதன் வாயிலாக இது கரக்கோவில் வகை எனக் கொள்ளப்படுகிறது. தற்போது தமிழகத்தில் இது ஒன்றே கரக்கோயில் எனக் கருதப்படுகிறது. மேலும் கேரளத்தில் இது போன்று பலக் கோவில்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்தப்பதிவில் மீதி உள்ள நான்கு கோவில் வகைகள் பற்றி காண்போம்.


1 comment: