Sunday, September 7, 2014

கோவில்-முதல் படி



தமிழர்களின் தொடக்க கால வாழ்விடங்கள் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. கடல் கோளினால் மூழ்கிய குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்றும், சுமேரியத்திலிருந்து , ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கடல் மார்கமாக வந்தவர்கள் என்றும், சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தோன்றியவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்திலும் தமிழர்கள் கடவுளை வழிபட்டுள்ளனர் என்பதற்கு யூகத்தின் அடிப்படையில் பல ஆதாரங்கள் உள்ளன. சிந்து சமவெளியில் கிடைத்த முருகன் மற்றும் கார்த்திகை மகளிர், அருந்த்தி ஆகியோர் உள்ள ஒரு இலச்சினையினை எடுத்துக்காட்டாக கூறலாம். இவை அனைத்தும் யூகங்கள் என்பதால் திராவிட நாட்டிற்கு வந்த பின் தமிழர்களின் சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் காண்போம்.
 
சிந்து சமவெளியில் கிடைத்த இலச்சினை
தமிழர்கள் பழங்காலந் தொட்டே பல நம்பிக்கைகள் கொண்டிருந்தனர். இதனை சங்க செய்யுட்களும் உறுதி படுத்துகின்றன. இதுவே சமயங்களாக வளர்ந்தது. அச்சமயங்கள் கோவில்கள் தோன்ற காரணமாக அமைந்தன. கோவில்கள் பழங்காலத்தில் கோட்டங்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் தங்கள் வாழும் நிலத்திற்கு ஏற்ப கடவுளை உருவகம் செய்தனர். உதாரணமாக சேயோன் எனும் முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாவான், மால் எனும் திருமால் முல்லை நில தெய்வமாவான், வருணன் நெய்தல் நில தெய்வமாவான் இது போன்று தனது வாழும் இடத்தினையும், தொழிலையும் வைத்து தெய்வங்கள் உருவாகினர். அவர்களுக்கு என்று கோவில்கள் எழுப்பி, வழிபடத் தொடங்கினர். இவர்கள் மட்டுமின்றி இந்திரன், சிவன், அம்மன் ஆகியோரும் வழிபாட்டில் இருந்த கடவுள்கள் ஆவர்.

கோவில்களின் முதல் கட்டம் நடுகற்கள் என கருதப்படுகிறது. நடுகல் வழிபாடே தமிழர்களின் பண்டைய வழிபாடு ஆகும். இறந்த வீரர்களின் நினைவாக, அவர்களின் பெயர், போர்த்திறன், பெற்ற வெற்றி முதலானவற்றை பொறித்து ஊருக்குப் புறத்தே உள்ள திடல்களில் நடுகற்களை நட்டு வழிபடுவர். இது போன்ற நடுகல் வழிபாடு தொல்காப்பியருக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்துவந்துள்ளது என்பது அவர் வெட்சித்திணையில் நடுகல் என்று தனியே ஒரு நிலை வைத்திருப்பதிலிருந்து அறியலாம். இதே போல் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் பரதவர்கள் சுறா மீனின் கொம்பினை மணலில் நட்டு அதனை கடவுளாக பாவித்து வழிபடுவர். இந்த நடுகற்கள் ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களாக கருதப்பட்டன. இவை கி.பி 11 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததாக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது எனினும் இவை இன்னும் வழக்கொழியவில்லை. இவற்றின் எச்சங்களே சுமை தாங்கிகளாகும். மேலும் ஊரின் எல்லையில் அமைக்கப்படும் காவல் தெய்வங்களான சாம்பான், இருளன், மதுரை வீரன் ஆகியோரும் நடுகல் வழிபாட்டின் எச்சங்களாகும். நவகண்டங்ச்களும் இவற்றின் வகைப்பாட்டில் இடம்பெறக்கூடியவையே ஆகும்.
 
நடுகற்கள்
கோவிலின் இரண்டாம் கட்டம் கந்துடை தெய்வங்களாகும். பொதியில் எனும் மன்றங்களில் உள்ள கந்துகளில் தெய்வங்களை நிறுத்தி மக்கள் வழிபட்டுவந்துள்ளனர். இதனை நாம் பட்டினப்பாலையின் வழியாக அறிய முடிகிறது. மேலும் இவற்றைப் பற்றி புறநானூறு பாடல்களிலும் கூறப்படுகின்றது. கந்துடை தெய்வங்களே பின்னர் சிவனின் லிங்க வடிவமாக மாற்றம் பெற்றது என்ற குறிப்புகள் இலங்கையின் தொன்மையான நூலான மகாவம்சத்தின் மூலமாக அறியமுடிகிறிது.

கற்களில் தெய்வங்களை நிறுத்தி மண்டபங்களுடன் கட்டப்பட்டதே மூன்றாம் நிலை கோவிகளாகும். இம்மூன்றாம் நிலைக் கோவில்களிலும் பல நிலைகள் உள்ளன. முதலில் மண் கொண்டே கோவில்கள் கட்டப்பட்டன. மண் கொண்டு கட்டப்பட்டவை மண்டளிகள் என்று அழைக்கப்பட்டன. இது போன்ற கோவில்கள் சான்றாக இல்லை எனினும் ‘சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்’ எனும் சிலப்பதிகார பாடல் வரியினை ஆதாரமாக  எடுத்துக்கொள்ளலாம். இவற்றை எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாடலும் உறுதி செய்கின்றன.  அதன் பிறகு செங்கல், சுண்ணாம்புக் கொண்டும் மரம் கொண்டும் கோவில்கள் கட்டப்பட்டன. செங்கல் கொண்டு கோட்டங்கள் அமைக்கப்பட்டதை சாளுவன் குப்பம் முருகன் கோவிலின் மூலமாகவும், மரத்தினால் கட்டப்பட்ட கோவில்களுக்கு தில்லை நடராசர் கோவில், தஞ்சை பெருவுடையார் கோவிலில் உள்ள சில மண்டபங்களின் மூலமாகவும் அறியலாம். இன்றும் சேர நாடான கேரளத்தில் மரங்களைக் கொண்டே கோவில்கள் அமைக்கப்படுகின்றன. செங்கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட கோவில்கள் இயற்கை சீற்றங்களினாலும், காலத்தினாலும் சிதைவுற்று போக கற்றளிகளைக் கொண்டு கோவில்களை மன்னர்கள் எழுப்பியுள்ளனர். இது போன்று இயற்கை சீற்றங்களால் கோவில்கள் அழிந்தது பற்றி அகநானூறு வாயிலாக அறியலாம். ஆதி காலத்தில் கோவில்கள் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டன, பிறகு மன்னன் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோவில்கள் கட்டப்பட்டன. சில மன்னர்களின் கல்லறைகளும் கோவில்களாகவே கட்டப்பட்டன. அதற்கு உதாரணம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள பிரம்மதேசத்தில்  இருக்கும் கடாரம் கொண்டானின் கல்லறைக் கோவிலாகும்.


கருவறை, மண்டபம் ஆகியன கொண்டு கட்டபட்ட கோவிலிலும் சில வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

மேலும் படிக்க:
தமிழ் விக்கிப்பீடியா
Thamilhindhu.com

Tamil.Thehindu.com

No comments:

Post a Comment