Wednesday, September 10, 2014

கோவிற்கட்டிடக்கலை – பாகம் 3

கோவிலின் பொதுவான கட்டிட அமைப்பு சென்ற இரு பதிவுகளில் பார்த்தோம். இப்பதிவில் ஒவ்வொரு மன்னனின் ஆட்சியிலும் எவ்வகை மாற்றங்கள் கோவில் கட்டிடக் கலையில் புகுந்தன என்று காண்போம்.

கி.மு ஆயிரம் முதல் கி.பி 300 வரை ஆண்ட முற்கால சோழர், சேரர், பாண்டியர் ஆகியோர் செங்களினால் கோவில்கள் கட்டினர். அவர்கள்  ஏழு வகைக் கோவில்களையே கட்டியுள்ளனர். அவற்றில் பெரும்பாலும் மாடக்கோவில்களே கட்டப்பட்டன. ஆனால் கூறிப்பிடதக்க மாற்றங்கள் ஏதும் கோவில் கட்டிடக்கலையில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழக கோவில் கட்டிட அமைப்பை காலத்தையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும் வைத்து சில வகைகளாகப் பிரிக்கலாம். அவை
மன்னர்கள் - காலம்(கி.பி)
பல்லவர் – 600-900
சோழர் – 900-1150
பாண்டியர் – 1100-1350
நாயக்கர் – 1600 க்கு மேல்

பல்லவர் கால கட்டிடக்கலை;


தமிழகத்திற்கு செங்கல், மரம், உலோகம் இல்லா கோவில்களை அறிமுகப்படுத்திய பெருமை பல்லவர்களையே சேரும். குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கற்றளிகள் ஆகிய அனைத்தினையும் இவர்கள் அறிமுகம் செய்து அதில் குறிப்பிட்ட வளர்ச்சியினையும் பல்லவர்கள் அடைந்துள்ளனர்பல்லவர் கால குடைவரைகளில் கடவுளின் சிலை இல்லாமலேயே காட்சி அளிக்கும். ஆனால் கடவுளின் சிலை வைக்க மூன்று அறை போன்ற அமைப்புகள் வெட்டப்பட்டு இருக்கும். இது போன்று பல குடைவரைகளுக்கு பிறகே கடவுளின் சிலை வைத்து பல்லவர் கோவில்கள் கட்டப்பட்டன. குடைவரைக் கோவில்களை விசித்திர சித்தனான மகேந்திரவர்மன் முதன் முதலில் கட்டத்தொடங்கினான். இது தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் ஆகும். அதன் பிறகே திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சியினைப் பெறத் தொடங்கியது. பல்லவர்கள் கட்டிடக்கலையின் உச்சம் என காஞ்சி கைலாசநாதர் கோவிலினையும், மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலினையும் கூறலாம்

சோழர்காலம்:
சோழர் காலம் கோவில் கட்டிடக்கலைக்கு பொற்காலமாகும். முன்பே
தஞ்சை பெருவுடையார் கோவில்
 
அறிமுகம் ஆகியிருந்த கற்றளிகள் சோழர்காலத்திலேயே உச்சத்தை அடந்த்து. பல்லவர்களைப் போலவே, ஒவ்வொரு சோழ மன்னரின் காலத்திலும் கோவிற்கலை சில மாறுதல்களைச் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றவாறு கோவில் கட்டிட அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக இராஜராஜன் பிரம்மாண்டத்தின் பிதாமகன், இரண்டாம் இராஜராஜன் கலைநுணுக்கங்களின் காதலன். சோழர்கள் புவியின் பரப்பில் குமிழிகள் போல பலக் கோவில்கள் கட்டினர். அதன் காரண கர்த்தா, உத்தம சோழனின் தாயான சேரன்மா தேவி ஆவார். இவர் இராஜராஜனின் காலம் வரை பல கோவில்கள் கட்ட வித்திட்டவர். கி.பி 1001 ல் சந்திர மவுலீஸ்வரர் கற்றளியே சேரன்மா தேவி நட்ட கடைசி அடிக்கல் ஆகும். இராஜராஜனின் பிரகதீசுவரர் ஆலயம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும் வரை சோழர்களின் கட்டிடக்கலையை உலகம் மறவாது. இதன் காரணமாகவே அழியாத பெருங்கோவில்கள் என்று சோழர்களின் மூன்று பெரும் கோவில்களும் போற்றப்படுகின்றன. இக்கோவில்களில் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி இன்றும் பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றுவருகின்றனபிற்கால சோழ மன்னர்கள் செங்கலால் கட்டப்பட்ட கோட்டங்களை கற்றளிகளாக மாற்றியுள்ளனர். இது போன்ற பணிகளை விக்ரம சோழன் ஆகியோர் செய்துள்ளனர். இதற்கு உதாரணமாக தஞ்சாவூர் இஞ்சிக்குடி கோயில் போன்றவற்றைக் கூறலாம். 

பாண்டியர் காலம்:
கோபுரங்கள் நிறைந்த மீனாட்சி அம்மன் கோவில்

பாண்டியர் கால கட்டிடக்கலைக்கு பிறகே கோவிலின் கோபுரங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. கோபுரங்கள் உயரமாக எழுப்பப்பட்டு கோவிலின் வலிமையான கட்டிட அமைப்பாக மாறத் தொடங்கியது. வேறெந்த குறிப்பிட்ட கட்டிடக்கலை வளர்ச்சியினையும், மாற்றத்தினையும் பாண்டியரின் கட்டிடக்கலை நிறுவவில்லை.

நாயக்கர் காலம்:

நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் முன்பே இருந்த கோவில்களை சீர் அமைக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்தனர். நாயக்கர்களும் பாண்டியர்களைப் போலவே கோவில் கோபுரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தினர். நாயக்கர்களின் ஆட்சியின் போதே பத்துக்கும் மேற்பட்ட நிலைகளையுடைய கோவில் கோபுரங்கள் எழுப்பபெற்றன. மேலும் அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய மண்டபங்கள் ஆகியவற்றையும் நாயக்கர்கள் கட்டியுள்ளனர்.

அடுத்த பதிவில் சிற்பக்கலையினைப் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் காண்போம்.

1 comment:

  1. hello. i don't see any updates on your blog for sometime. you have any other place where you are writing about temple architecture ?

    ReplyDelete