Tuesday, September 9, 2014

கோவிற்கட்டிடக்கலை – பாகம் 2

விமானம் மற்றும் கோபுரக்கலை:
ஒவ்வொரு கோவிலிலும் அதன் கோபுரம் அல்லது விமானம் முக்கிய பங்கினை வகித்துவரும் கட்டிட அமைப்பு ஆகும். ஆதி காலத்தில், கோவிலின் கோபுரமே அவ்வூரின் உயரமான கட்டிடமாக விளங்கியுள்ளது. இதன் காரணத்தை ஆராய்ந்தோமேயானால் முன்னோர்களின் தற்காப்புக் கலை புலப்படும். கோபுரங்களில் உள்ள கலசங்கள் தானியங்களுக்கும், மக்களுக்கும் பாதுகாவலனாக விளங்கியுள்ளது. இடி, மின்னல் ஆகியவற்றின் போது இடிதாங்கியாகவும், வெள்ளம் வந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட போது அடுத்த வெள்ளாமைக்கு உண்டான விதை தானியங்களை வழங்கும் ஆபத்பாந்தவனாக விளங்கியவை கோபுர கலசங்களாகும். இக்கோபுரத்தின் கட்டிட அமைப்பைப் பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.
கோவிலின் கருவறை மேல் அமைந்து இருப்பது விமானம் அல்லது சிகரம் ஆகும். கோவிலின் மதிலோடு கூடிய நுழைவுவாயிலில் இருப்பது கோபுரம் ஆகும்.
தென்னிந்தியக் கோவில்கள் பெரும்பாலும் கருவறையின் மேல் உள்ள விமானத்தை உயரமாகப் பெற்றுள்ளன. இவற்றுள் சில விமானங்கள் கோபுரத்தினைப் போன்ற அமைப்பைப் பெற்றுள்ளன. கோவிலின் வகை பெரும்பாலும் கோவிலின் விமானத்தினை வைத்தே கணிக்கப்படுகின்றன.
விமானத்தின் தலைப்பகுதி, எட்டு பட்டைகளைக் கொண்டிருந்தால் திராவிட வகைசதுரமாக இருந்தால் அது நாகரம் , வட்ட வடிவமாக இருந்தால் அது வேசரம் வகையைச் சார்ந்தது ஆகும்.

விமானம் மொத்தம் ஆறு உறுப்புகளைக் கொண்டது ஆகும். அவை
  • ·         அதிட்டானம்,
  • ·         பிட்டி,
  • ·         பிரஸ்தனம்,
  • ·         கர்ணகூடு,
  • ·         கிரீவம்,
  • ·         கும்பம்.

ஆறு உறுப்புகளையும் கொண்ட விமானம் சாடங்க விமானமாகும். விமானம் கல், சுதை, உலோகம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டிட அமைப்பு ஆகும். அதிட்டானம் என்பது கருவரைக்கும் கீழ் உள்ள பகுதியாகும். இதில் அலங்காரத்துடன் கூடிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பிட்டி என்பது கர்பகிரகத்தை உருவாக்கும் சுவர்கள் ஆகும். இவற்றில் காணப்படும் வாயில் போன்ற அமைப்பு தேவ கோட்டம் ஆகும். இவற்றில் தட்சன், லிங்கோத்பவன், துர்க்கை, நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இருப்பர். இத் தெய்வங்களே சூரியனிடமிருந்து சக்தியினை வாங்கி கர்ப கிரகத்தில் இருக்கும் கடவுளுக்கு தருவதாகக் கூறப்படுகிறது. கருவரையின் கூரையே பிரஸ்தனம் என அழைக்கப்படுகின்றது. இவற்றில் யாளி, பூதங்கள் போன்ற உருவங்கள் குடி கொண்டிருக்கும். பிரஸ்தன அமைப்பிலேயே கடவுளின் வாகனத்தினுடைய சிற்பம் இடம்பெறும். உதாரணமாக கோவிலின் கருவரையில் சிவன் இருந்தால் நந்தியும், திருமால் இருந்தால் கருடனும் சிற்பங்களாக அருள்பாலிப்பர்.பிரஸ்தனத்திற்கு மேல் உள்ள பகுதி கிரீவம் ஆகும். இவை பெரும்பாலும் சதுரம் மற்றும் எண்பட்டை வடிவில் கட்டப்படும். அதன் மேல் அமைந்திருக்கும் கூர்மையான உலோகத்தினால் ஆன பாகமே கும்பம் ஆகும். இதனை கலசம், ஸ்தூபி, குடம் என்றும் கூறுவர்.

கலசத்தின் துணைக் கொண்டே ஒவ்வொரு கோவிலின் கடவுள் சிலைக்கும் சக்தி ஊட்டப்படும், மேலும் பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அவை புதுபிக்கப்படும், மேலும் கலசத்தின் உள் இருக்கும் தானியங்கள் பன்னிரண்டு ஆண்டுக்குள் அதன் இடிதாங்கும் சக்தியினை இழந்துவிடும் என்பதால் அவையும் இந்நிகழ்வின் போது மாற்றப்படும். இதன் பொருட்டு நடக்கும் சடங்கே  குடமுழுக்கு ஆகும்.

பல்லவர், சோழர் ஆகியோரின் காலக்கட்டங்களில் கோவிலின் கோபுரத்தைவிட கோவிலின் விமானமே உயரமாகக் கட்டப்படும். இராஜராஜனின் காலத்திலேயே விமானக் கட்டிடக்கலையின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. பின்னர் பாண்டியர் காலங்களில் விமானக் கட்டிடம் அதன் பிரம்மாண்டத்தை இழக்கத் தொடங்கியது. அதன் பின்னர் கோவிலை சுற்றியுள்ள மதில்களும், வாயிற் கோபுரமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இதன் காரணம் குறித்து கட்டிடக்கலை ஆராய்சியாளர் பேர்சி பிரவுன், கோவிலின் பழமை மாறாமல் இருக்க அதன் விமானத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு அதன் கோபுரத்தையும் சுற்று மதில்களையும் உயரம் எழுப்பி அதன் பிரம்மாண்டத்தினை கூட்டியுள்ளனர் என்று கூறுகிறார்.

படிப்படியாக வளர்ச்சியை எட்டியது கோபுரக் கட்டுமானம். தமிழ்நாட்டில் இருக்கும் பழம் பெறும் கோபுரமானது காஞ்சி கைலாசநாதர் கோவில் கோபுரமாகும். இதில் ஒரே ஒரு தளம் மட்டுமே அமைந்துள்ளது. தற்போது தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரமான திருவரங்கம் அரங்கநாதர் கோவிலின் கோபுரம் 13 தளங்களைக் கொண்டு கோபுரக் கட்டுமானத்தின்  பிரம்மாண்டத்தைக் காட்டுகின்றது. ஆரம்ப காலக்கட்டங்களில் ஒரு கோவில் ஒரு வாயிற்கோபுரத்தை மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு வாயிற் கோபுரங்கள் கட்டப்பட்டு , ஒரே கோவில் பல கோபுரங்களைக் கொண்ட அமைப்பாக மாற்றம் பெற்றது. அக்கோபுரங்களில் பெரிய கோபுரம் இராஜ கோபுரம் என அழைக்கப்பெற்றது. மேலும் கோபுரங்கள் பல வகையான சிற்பங்களைத் தாங்கி இருப்பதனால் இவை சிற்பக்கலைக்கும் வழிவகுத்தன.

அடுத்த பதிவில் ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலத்திலும் ஏற்பட்ட கோவிற் கட்டிடக் கலையின் வரலாற்றைக் காண்போம்.


No comments:

Post a Comment