Tuesday, September 9, 2014

கோவிற்கட்டிடக்கலை – பாகம் 1

நம்மவர்களின் கட்டிடக்கலை சிறப்பை சில வரிகளில் விளக்க இயலாது. பிரம்மாண்டம், ஆச்சரியம் ஆகியவற்றின் வெளிப்பாடே நம்மவர்களின் கட்டிடக்கலையாகும். திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் காவிரி ஆறு பிரியும் இடத்தில், நிலங்களுக்கு சென்று பயனலிக்கும் ஆற்றின் பிரிவை விட, கடலில் சென்று கலக்கும் பிரிவு பத்து அடிகள் தாழ்வான நிலையில் இருந்துள்ளது. இதனால் நாட்டிற்கு வரும் நீரை விட கடலில் அதிக அளவு நீர் கலந்து விரயம் ஆவதைத் தடுக்க என்னினான் கரிகாலன். இதற்காக வருடம் முழுவதும் நொடிக்கு இரண்டு லட்சம் கனஅடி என ஆர்பரித்து செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டாம் நூற்றாண்டில், ஆயிரத்து தொல்லாயிரம் ஆண்டுகளாக பல காவிரியின் வெள்ளத்தை பார்த்து மிரளாமல் திசை திருப்பிவிடும் மகத்தான அணைக்கட்டான கல்லணையை கட்டி, சோழ நாடு சோறுடைத்துஎனும் பழமொழியையும் நிலைபெறச் செய்தார் கரிகாலன். இவரின் வழித் தோன்றல்கள் எவ்வாறு கோவிலின் கட்டிடக்கலையில் சிறந்துவிளங்கின எனக் காண்போம்.
கோவிலின் கட்டிடக்கலை எனில் அதில் விசயால சோழனின் பரம்பரையினையும், விசித்திரசித்தனின் வழித் தோன்றல்களையும் விடுத்துஒரு வரலாறு எழுத முடியாதுஎன்று கூறும் அளவிற்கு கோவில் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியவர்கள் இவர்கள். கோவில்கட்டிடக்கலை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வளர்ச்சியினை கண்டுள்ளது. முதலில் கோவில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துவிட்டு பின்னர் அவற்றின் வளர்ச்சியினையும் சிறப்பையும் காண்போம்.

கோவிலை மனிதனின் உடலோடு ஒப்பிட்டு சித்தர்கள் கூறுவர். மனித உடலே திருக்கோவில், உள்ளம் என்பது கருவரை எனக் கூறுகின்றனர். மேலும் முழு உடலையும் கோவிலுடன் ஒப்பிட்டு திருக்கோவிலின் பாகங்களை விளக்குகின்றனர் சித்தர்கள். இதன் பொருட்டே மனித உடலில் உள்ள ஒன்பது வாயில்களைக் குறிப்பது போல் சில கோவில்களில் ஒன்பது வாயில்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகு கோவில்களுக்கு உதாரணம் சிதம்பரம் நடராசர் கோவிலும், மதுரை மீனாட்சியின் கோவிலுமாகும். சித்தர்களின் கூற்றுப்படி, தலை என்பது கோவிலின் கருவரை, முகம் அர்த்த மண்டபம், நெஞ்சு ஸ்நபன மண்டபம், கொப்பூழ் மகா மண்டபம், கணுக்கால் ஆஸ்தான மண்டபம், பாதம் கோபுரம், பாத விரல்கள் கோபுரக் கலசங்கள் என்று கூறப்படுகின்றது. தலை என்று பொதுவாக கூறினாலும் புருவத்தின் மத்தியே கருவரையின் வாயில் எனக் கருதப்படுகிறது. தலையின் உச்சியில் கடவுளின் சிலை இருப்பதாகவும் கருதப்படுகின்றது. கோபுரமே இறைவனின் திருப்பாதமாக கருதப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் இறைவனின் பாதத்தில் உறைவதனால் கோபுர தரிசனம் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் சித்தர்களின் வாக்கு ஆகும்.

கோவில் என்பது ஆகம சாஸ்திரத்தினைக் கொண்டே கட்டப்படுகின்றது. பாரத திருநாட்டில் மூன்று வகையில் கோவில்கள் கட்டப்படுகின்றன.அவை,
  • ·         நாகரம்,
  • ·         வேசரம்,
  • ·         திராவிடம்

தமிழர்களுக்கு என குறிப்பிட்ட வகை கிடையாது. திராவிட கலை பாணியிலேயே அனைத்து தமிழகக் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. ஒரு கோவிலுக்கு குறைந்தது இரண்டு வாயில்களாவது அமைக்கப்பட வேண்டும். ஒன்று கோவிலினுள் நுழையவும், மற்றொன்று கோவிலில் இருந்து வெளியேறவும் எனக் கருதப்படுகிறது. எனினும் சில பழங்காலக் கோவிகளுக்கு ஒரு நுழைவாயிலே உள்ளன. திருக்கோவிலுக்கு முன் தெப்பக்குளம் இருப்பது பக்தர்களின் உடலைத் தூய்மை செய்துவிட்டு கடவுளைத் தரிசிக்கவாகும்.

கோவிலின் உறுப்புகள்:
  • ·         கருவறை,
  • ·         அந்தரளம்,
  • ·         அர்த்த மண்டபம்,
  • ·         மகா மண்டபம்,
  • ·         முக மண்டபம்,

ஆகியன கோவிலின் உறுப்புகளாகும். பெரிய கோவில்களில், நடன மண்டபம், நூறுகால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று மாளிகை, பரிவாராலயங்கள் ஆகியவற்றில் சிலவும் இடம்பெறும். இவை அனைத்தையும் உள்ளடக்க திருமதிலும், கோபுரமும் கட்டப்பட்டன. கடவுள் உறையும் இடம் கருவறை ஆகும். வழிபாட்டிற்குத் தேவையான பொருட்கள் வைக்குமிடம் அந்தரளம். இதனை இடைநாழி என்றும் கூறுவர். பக்தர்கள் நின்று வழிபடுமிடம் அர்த்த மண்டபம் ஆகும். பக்தர்கள் காத்திருந்து வழிபடுமிடம் மகா மண்டபம் ஆகும். இவ்விடத்திலேயே கடவுளின் வாகனமும் இருக்கும். இதற்கும் வெளியே இருப்பது முகமண்டபம் ஆகும். பெரும்பாலும் முக மண்டபமும், மகா மண்டபமும் ஒன்றாகவே இருக்கும்.

 முதலில் கட்டுமானக் கோவில்களில் கருவரையும் ஒரு மண்டபமும் மட்டுமே கட்டப்பட்டதாகவும், பின்னர் வந்த மன்னர்கள் கோவிலின் பிரம்மாண்டத்தைக் கூட்ட மேலும் சில மண்டபங்களை கூட்டியதாகவும், இதன் பொருட்டே கோவில்கள் இருட்டு மயமாக காட்சியளிக்கத்தொடங்கின  என்றும் கூறப்படுகிறது.

அடுத்தப்பதிவில் கோவில் கோபுரத்தின் கட்டுமானம் குறித்துப் பார்ப்போம்

No comments:

Post a Comment