Sunday, August 3, 2014

முன்னுரை

கோவிற்கலையும், கோவிலும் தமிழர்களின் வாழ்வியலில் இன்றும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழக அரசின் இலச்சினையாகும். கோவிற்கலை என்பது ஆதி காலம் தொட்டு தமிழனின் ஆறாவது அறிவினில் உதித்த பல கலைகளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டதாகும்கோவிற்கலை என்பது கோவிலின் கட்டிட அமைப்பைப் பற்றியது மட்டும் அன்று.

 1. கோயிற் கட்டிடக்கலை,
 2. சிற்பக்கலை,
  •               படிமக்கலை,
  •     வாகனக்கலை   ,
 3. ஓவியக்கலை,
 4. இசைக்கலை,
       ·         தேவாரப் பண்ணிசை,
       ·         நாதசுரம்/தவில்
       ·         பக்திப் பாடல்கள்
       ·         சமயச் சொற்பொழிவுகள்,
       ·         வில்லுப்பாட்டு,
 5. ஆடற்கலைகள்,
 6. சாத்துப்படிக்கலை,
 7. உலோகக்கலை
          ·         விளக்குகள்,
          ·          மணிகள்,
          ·         உலோக சிலைகள்,
 8. தற்காப்புக்கலை,
 9. நிர்வாகக்கலை.
என மேற்கூறிய யாவும் கோவிற்கலைகளுனுள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைந்தவை ஆகும்.

தனது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் முன்னோர்கள் கோவில்களில் பதிவு செய்துள்ளனர். கடவுளுக்கு என்ன உணவளிக்க வேண்டும், எவ்வளவு எனத் தொடங்கி பெற்ற பரிசு, வென்ற நாடு, நடந்த யுத்தம் முதலிய அனைத்தையும் கோவில்களில் கல்வெட்டுகளாக பதியப்பட்டன. 
போரினை விளக்கும் நுணுக்கமான சிற்பம்

இதைத் தவிர மருத்துவக் கலையும் கோவில் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஒவ்வொரு கோவிலின் சிலைகளும் குறிப்பிட்ட நோயினை குணப்படுத்தும் வகையில் மருத்துவ குணமுடையதாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வகையில் அமைக்கப்பட்ட கோவில்களுக்கு சிறந்த உதாரணம் பழனி முருகனின் நவபாசான மூலவர் சிலையாகும். கோவில்கள் மட்டுமின்றி கோவில் தேர்களிலும் நம் முன்னோர்கள் மருத்துவக்கலையினை பயன்படுத்தியுள்ளனர். அதன் காரணமாக அனைத்து தேர்களையும் மூலிகையான இலுப்பை மரத்தில் செய்துள்ளனர்.

கோவில்கள் அக்காலங்களில் வழிபாட்டிற்கு மட்டும் கட்டப்பட்டவை அன்று. அவை நம் முன்னோர்களின் வாழ்வியலில் முக்கிய இடத்தில் இருந்துள்ளன. பண்டைய காலத்தில் கோவில்கள் சமுதாயக் கூடங்களாகத் திகழ்ந்துள்ளன. நம் முன்னோர்கள் தமது சொத்துக்களையும், நிலங்களையும் கோவில்களுக்கு தானமாக வழங்கினர். மன்னர்களும் தாம் வென்று வந்த தேசங்களின் பொன்னையும், பொருட்களையும் கோவில்களுக்கு தானமாக வழங்கினர். சிலர் இவற்றிற்கெல்லாம் மேலாக தனது இன்னுயிரையும் கோவில்களுக்காக அர்பணித்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நவகண்டம் எனும் சிலைகளை வடித்து மக்கள் சிறப்பித்துள்ளனர்.

அக்காலத்தில் கோவில்கள் என்பது மனிதனின் அனைத்து கலைகளையும் வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஏதுவான இடமாக இருந்துள்ளது. பொதுமக்களுக்கு அறிவை புகட்டும் இடமாகவும் கோவில்கள் திகழ்ந்துள்ளன. அனைத்துக் கவின் கலைகளும் மன்னன் வாழுமிடமான அரண்மையில் அல்லாமல் கோவில்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. மன்னர்கள் கோவில்களை தமது கருவூலங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரும் சான்றோர்களையே அதற்கு நிருவாகிகளாக அரசர்கள் நியமித்துள்ளனர். கோயில்களின் மூலமாக வறியோர்களுக்கு அன்னமிடல், இளைப்பாற இடமளித்தல் என நற்காரியங்களையும் செய்துள்ளனர் நம்முன்னோர்கள்.

பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் பேணிக்காக்கும் இடமாகவும் கோவில்கள் திகழ்ந்துள்ளன. கோவில்களில் நம்முன்னோர்கள் பல அறிவியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளனர். அந்த அறிவியல் பின்னணியினை அவர்கள் கண்டுபிடித்தது எப்படி, எதை கொண்டு அறிந்தார்கள் என்பன இன்று வரை விடைக்காண முடியாத கேள்விகளாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பஞ்சபூத தலங்களில் மூன்று கோவில்களான திருக்காளத்தி கோவில், சிதம்பரம் நடராசர் கோவில், காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதையும், தில்லை நடராசரின் உருவம் அணுவின் சுழற்சியை ஒத்து இருப்பதையும், புவியின் காந்தபுல ரேகையின் மையப்பகுதியில் சிதம்பரம் நடராசர் கோவில் அமைந்து இருப்பதனையும் கூறலாம். மேலும் நடராஜனின் நடனம் பிரபஞ்ச நடணம் என அழைக்கப்படுகின்றது. இதன் காரணமாக பிரபஞ்சத்தின் இரகசியம் கண்டுபிடிக்க ஐரோப்பாவில் கட்டப்பட்டுள்ள சி.ஐ.ஆர்.என் ஆய்வகத்தில் சிவனின் நடராஜர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
அணுவின் சுழற்சியை ஒத்த சிவனின் நடணம்.
சி.ஐ.ஆர்.என் இல் வைக்கப்பட்டுள்ளது இச்சிலை.


அத்துடன் நில்லாமல் சனி கோளின் கதிர்கள் பூமியில் சரியாக விழுமிடத்தில் சனிபகவானுக்கு உகந்த திருநள்ளாறு கோவிலை அமைத்திருகின்றனர். மேலும் பத்தொண்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் பரிணாம வளர்ச்சியினை திருமாலின் தசவதாரங்கள் மூலம் கூறிய பெருமையும் நம் முன்னோர்க்கே சென்று சேரும். இத்துணை நன்மைகளை தன்னகத்தே  கொண்டதன் காரணமாக கோவில் இல்லா ஊரில் குடி புக வேண்டாம் எனும் பழமொழியும் உண்டாயிற்று.

இது போல் தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துச்சென்ற கோவிற்கலைகளைப்பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.


கோவிற்கலை வளரும்
மேலும் அறிய:
தமிழ் விக்கிப்பீடியா,
ஆங்கில விக்கிப்பீடியா,
https://sagotharan.wordpress.com

No comments:

Post a Comment