Wednesday, September 10, 2014

சிற்பக்கலை

ஆதி காலத்திலிருந்தே தமிழர்கள் உருவ வழிபாட்டிணை செய்தவர்களாவர். அக்காரணத்தினால் சிற்பக்கலை தமிழக கோவில்களில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்தது. சிற்பக்கலை என்பது அறுபத்து நான்கு ஆயக்கலைகளில் ஒன்று ஆகும். பல பொருட்களில் சிற்பங்களை உருவாக்க முடியும் எனும் காரணத்தால், மற்ற கலைகளைக் காட்டிலும் சிற்பக்கலை நன்கு வளர்ச்சியினை அடைந்தது. சிற்பங்கள் மண், சுடுமண், சுதை, தந்தம், உலோகம், கற்கள் , மரங்கள் ஆகிய அனைத்து பொருட்கள் கொண்டும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. கோவில் விமானங்கள், கோபுரங்கள் ஆகியன சிற்பக்கலையினை வளர்க்க உதவிய கட்டிட அமைப்புகளாகும். சிற்பங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன பற்றி சிற்ப சாஸ்திரம் எடுத்துக் கூறுகின்றன.

இத்தகு கவின் கலை கற்களால் கோவில்கள் அமைக்க ஆரம்பித்த பின்னரே நிலைபேர் அடையத் தொடங்கின. அதன் முன்னர் சிற்பங்கள் மண் மற்றும் சுதை கொண்டு உருவாக்கப்பட்டன. மண் கொண்டு சிற்பங்கள் செய்பவர் மண்ணீட்டாளர் என்று அழைக்கப்பட்டனர். அதன் பின் சுடு மண் சிற்பங்கள் சிறப்படையத் தொடங்கின. 'சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின்' எனும் பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் சுடுமண் சிற்பங்கள் பற்றி  அறியலாம். பின் மரச்சிற்பங்களும் சிறப்படையத் தொடங்கின. கடவுளின் மூலவர் சிலையும் மரத்தில் செய்து வழிபடப்பட்டன. சுதை சிற்பங்களும் மண்ணாலான சிற்பங்களைப் போலவே சிறப்பானதாகக் கருதப்பட்டது. சுண்ணாம்பு, கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு ஆகியன கொண்டு வஞ்சிரம் தயாரித்து சுதை சிற்பங்கள் உருவாக்கப்படன. காவிரிப்பூம்பட்டினத்தில் தொல் பொருள் ஆய்வாளர்கள் இத்தகு சிலைகளை கண்டெடுத்துள்ளனர். பல்லவர் மற்றும் சோழர்களும் இத்தகு சுதை சிற்பங்களை கோபுரங்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தியுள்ளனர். இவை அனைத்தின் மூலமும் கலை வளர்ந்திருந்தாலும், இயற்கை சீற்றங்கள், கால ஓட்டம் ஆகியவற்றினால் இச்சிற்பங்கள் விரைவில் அழிவை சந்தித்தன. அக்குறையை போக்க வந்தவையே கற்சிற்பங்களாகும்.

கற்சிற்பங்கள்:
சங்ககாலத்திலேயே கற்சிற்பங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல்லவர் காலத்தின் பிறகே இவை வளர்ச்சி பாதையில் செல்லத் தொடங்கின. குடைவரைக் கோவில்களில் ஓரளவு அற்புதத்தை வெளிப்படுத்திய புடைப்புச் சிற்பங்கள் ஒற்றைக்கல் இரத்தில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்தன.பல்லவர் காலத்தை அடுத்து சோழர்காலத்தில் கற்சிற்பங்கள் நளினத்தையும், சிற்பக்கலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினையும் கொண்டு  விளங்கின.

சிற்பங்களின் வகைகள்:

  • புடைப்புச் சிற்பம்,
  • முழு சிற்பம்

புடைப்புச் சிற்பம்

புடைப்பு சிற்பம் என்பது ஒரு பகுதி மட்டும் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கும் அமைப்பு ஆகும். முழு சிற்பம் என்பது முப்பரிமான சிலையாகும்.புடைப்புடச் சிற்பங்கள் குடைவரை, கோவில் தூண்கள் ஆகியவற்றில் காணப்படும். மூலவர் சிலை போன்றன முழு சிற்ப வகையைச் சேர்ந்தது ஆகும்.

நிலைத்து ஒரே இடத்தில் இருக்கும் சிற்பம் கொடுமையான போரினையும், அதனால் ஏற்படும் விளைவினையும் எடுத்து கூறும் வல்லமைப் பெற்றது ஆகும். தமிழர்களின் சிற்பங்கள் உலகத்தவரின் சிற்பங்களிலிருந்து வேறுபட்டது ஆகும். நடன அசைவுகள், முக பாவனைகள் ஆகிய அனைத்தும் நம்முன்னோர்களின் சிற்பங்களில் காணப்படுகின்றன. கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலி, கிளியின் வாயில் உருளும் பந்து ஆகியன தமிழர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். மாமல்லபுரத்தில் உள்ள நீர் தோக்கத் தொட்டி சரியாக வட்டவடிவில் இருப்பதும், தஞ்சை பெரிய கோவிலின் சுற்று சுவரில் உள்ள சிறு சிறு துளைகளும் பிரம்மிக்க வைக்கும் கலை நுணுக்கங்களாகும்.   மேலும் உலகமே வியக்கும் அர்சுணன் தவமும் பல்லவரின் சைற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சுவரோவியம் போல இதில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வட்டவடிவில் இருக்கும் நீர்த்தேக்கம்

திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள மன்மதரின் சிலையூம் இது போன்ற பிரம்மிக்க வைக்கும் சிற்பக்கலையை தன்னகத்தே வைத்திருந்த சிலையாகும். இக்கோவிலில் கல்லால் செய்யப்பட்ட மன்மதன் வைத்திருக்கும் கரும்பு உண்மையான கரும்பினைப் போல் வளைந்து இருப்பதனையும், கரும்பின் இடையில் குண்டூசி செல்லும் அளவு சிறு துளை இறுதி வரை சென்றிருப்பதையும் உடைந்த பிறகு அறிந்து கொண்டது நமது போதாத காலமாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள சிறு துளைகள்

மேலும் சிற்பக்கலையினைப் பற்றி அடுத்தப்பதிவில் காண்போம்.

No comments:

Post a Comment